இதுதொடர்பாக பாகிஸ்தான் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் சார்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், " குல்பூஷன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு ஏற்ப, ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்து, மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் குல்பூஷனுக்கு ஒரு ஆலோசகரை நியமிக்க வேண்டும்" என்று கோரியுள்ளது.
முன்னதாக, ஜாதவிற்கும் தூதரக அலுவலருக்கும் இடையே நிபந்தனையற்ற உரையாடலை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை. இதன்காரணமாக, ஜாதவ் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று இந்திய தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஜாதவ் மற்றும் தூதரக அலுவலர் இடையிலான உரையாடல் கேமரா மூலம் தெளிவாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், பாகிஸ்தான் வழங்கும் தூதரக அணுகல் "அர்த்தமுள்ளதாகவோ நம்பகமானதாகவோ இல்லை" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்திய தரப்பில் இதுபோன்ற செயல்களுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்துவந்தபோதிலும், ஜாதவ் மற்றும் தூதரக அலுவலருக்கு அருகிலேயே மிரட்டும் தொனியில் பாகிஸ்தான் அலுவலர்கள் இருந்ததாக செய்தித் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருந்தார். ஜாதவ் மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் கூறினார், மேலும் தூதரக அலுவலருக்கு அதனை தெளிவாக சுட்டிக்காட்டினார்.
ஜூலை 13ஆம் தேதி தடையற்ற மற்றும் நிபந்தனையற்ற தூதரக அணுகலை வழங்குமாறு பாகிஸ்தானிடம், இந்தியா தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டது. மேலும், ஜாதவ் மற்றும் இந்திய தூதரக அலுவலர் உரையாடலின்போது, அச்சுறுத்தம் வகையில் அவர்களுடன் எந்தவொரு பாகிஸ்தான் அலுவலரும் இருக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டது. மேலும், இந்த உரையாடலை பதிவு செய்ய வேண்டாம் (வீடியோ மற்றும் ஆடியோ) எனவும் பாகிஸ்தான் அரசிடம் கோரப்பட்டது.
உளவு குற்றச்சாட்டில் ஜாதவ் பலூசிஸ்தானில் இருந்து 2016ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இந்தியா, ஜாதவ், ஈரானிய துறைமுகமான சபாஹாரில் இருந்து கடத்தப்பட்டதாக தெரிவித்தது.
பாகிஸ்தானை உளவு பார்த்ததாக கூறி, அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் , குல்பூஷனுக்கு மரண தண்டனை விதித்தது. இதனை, மே 2017யில், சர்வதேச நீதிமன்றம் அதனை நிறுத்திவைத்தது.