பீகார் மாநிலம் பாட்னாவில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ’பாகிஸ்தான் கடந்த 1965, 1975 ஆண்டுகளில் செய்த தவறுகளை மீண்டும் செய்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு என்ன ஆகும் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். பாகிஸ்தான் தொடர்ந்து பலூச், பஸ்தூன்ஸ் இன இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இது தொடர்ந்தால் பாகிஸ்தான் சிதைவுறுவதை உலகத்தில் இருக்கும் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டமான 370பிரிவு புற்றுநோயைப் போன்று தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதை பாஜக அரசு தூக்கி எறிவதில் உறுதியாக இருந்தது. மேலும் இதற்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள நான்கில் மூன்று பகுதி மக்கள் இந்த 370பிரிவு சட்டத்தை நீக்கியதற்கு ஆதரவு அளித்தனர்.
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அந்த பேச்சுவார்த்தையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்ததாகவே இருக்கும் என்றார்.