இந்தியக் கடற்படை முன்னாள் வீரரான குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவத்தால் 2016ஆம் ஆண்டு கைத்செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் குல்பூஷணுக்கு அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதனைச் சகித்துக்கொள்ளாத இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. குல்பூஷண் வழக்கில் பாகிஸ்தான் வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையாகவும் நடந்துகொள்ளவில்லை என்று இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. பின்னர், குல்பூஷணைத் தூக்கிலிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
கடந்தாண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் குல்பூஷண் வழக்கை நியாயமான முறையில் சீராய்ந்து, அவரின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்தியத் தூதரக அலுவலர்கள் குல்பூஷணைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.
இச்சூழலில், கடந்த மே மாதம் குல்பூஷண் தண்டனைக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வதற்காக, பாகிஸ்தான் அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. ஆனால், இச்சட்டம் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தின் கீழவையில் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் இருந்தாலும், மேலவையில் சட்டத்தை நிராகரிப்பதற்கான போதுமான பலத்தைக் கொண்டுள்ளது. ஆகவே, இச்சட்டத்தை நிறைவேற்றுவதில் இம்ரான் கான் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் குவாஜா ஆசீஃப், “நாங்கள் வரலாற்றில் உண்மையின் பக்கம் நிற்க ஆசைப்படுகிறோம். ஆனால், இம்ரான் கான் அரசோ இந்தியாவின் கட்டாயத்தின் பேரில் செயல்படுகிறது. அவ்வாறு நாங்களும் செயல்பட எங்களுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை” என்றார்.
இது ஒருபுறம் இருக்க, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்றுவதில் பாகிஸ்தான் தாமதப்படுத்துவதாக இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட தொடங்கிவிட்டது. இதனால் சர்வதேச அரங்கில் தன் மீதான மதிப்பு சரிந்துவிடும் என்று பாகிஸ்தான் எண்ணியது.
அதன் வெளிப்பாடாகவே 'சர்வதேச நீதிமன்றம் மறுஆய்வு மற்றும் மறு பரிசீலனை அவசரச் சட்டம்-2020' (குல்பூஷண் சீராய்வு மனு தாக்கல் செய்ய வகைசெய்யும் சட்டம்) என்ற பெயரில் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முனைப்பில் தீவிரமாக இறங்கியது.
ஆனால், எதிர்க்கட்சிகள் அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, முன்னேயும் நகர முடியாமல் பின்னேயும் நகர முடியாமல் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துக்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் ராஜதந்திர வெற்றி: குல்பூஷன் ஜாதவை சந்திக்கவுள்ள தூதரக அலுவலர்கள்