பாகிஸ்தானில் 30-க்கும் அதிகமான பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்பட்டுவருவதாகவும், அங்கு பயிற்சி எடுக்கும் பயங்கரவாதிகள் காஷ்மீரிலும் இன்னபிற பகுதிகளிலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் ஒப்புக்கொண்ட அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், இனி பயங்கரவாத இயக்கங்களை எங்கள் நாட்டுக்குள் செயல்பட அனுமதிக்கமாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், "பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுவதாக அந்நாட்டு பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளதால், அந்த பயங்கரவாதிகள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயருக்காக அரை மனதுடன் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது" என்றார்.