குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற வீரமரணமடைந்த பாதுகாப்புப் படையினருக்கான இரங்கல் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததை பாகிஸ்தானால் ஜீரணிக்க முடியவில்லை எனத் தெரிவித்தார். அதனால் இந்தப் பிரச்னையை பாகிஸ்தான் உலக நாடுகள் மத்தியில் கொண்டுபோய் முறையிடுவதாகவும் ஆனால் அதை மற்ற நாடுகள் நம்ப மறுப்பதாகவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன் நாட்டு வீரர்களிடம், காஷ்மீர் விவகாரத்தில் எல்லையைத் தாண்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய ராஜ்நாத் சிங், அதை அவர்கள் பின்பற்றுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஒருவேளை எல்லையைக் கடப்பார்கள் என்றால் அவர்கள் தன் நாட்டிற்கு திரும்ப மாட்டார்கள் எனவும் எச்சரிக்கைவிடுத்தார். மேலும், இந்திய வீரர்களும் எதற்கும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் சிறுபான்மை சமூக மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனச் சொன்ன ராஜ்நாத் சிங், தங்கள் நாட்டில் அம்மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்; எப்போதும் பாதுகாக்கப்படுவார்கள் என உறுதி கூறியுள்ளார். ஆனால் பாகிஸ்தானிலோ சீக்கியர்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட மக்கள் மீது தொடர்ந்து வன்முறை நிகழ்த்தப்பட்டுவருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்கவிப்பதை நிறுத்தவில்லை என்றால் அதுவே அந்நாட்டை சுக்குநூறாக்கிவிடும் எனவும் எச்சரிக்கைவிடுத்தார்.