பாகிஸ்தானின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள ராக்சிக்ரி பகுதியில் வான்வெளி விதிகளை மீறி பாகிஸ்தான் எல்லைக்குள் 650 மீட்டர் வரை இந்தியாவின் ஆளில்லா சிறிய ரக உளவு விமானம் ஊடுறுவியதாகவும், அதனை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாலகோட் பகுதியில் அமைந்திருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல்கள் நடத்தி அழித்தது. இதன் காரணமாக இருநாடுகளுக்கு இடையேயான உறவு மோசமான நிலையில் உள்ளது.
இதனிடையே, இரண்டாம் முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த அரசியலமைப்பு சட்டம் 370-ஐ நீக்கியது. இதனால், இந்தியா உடன் ராஜாங்க ரீதியான உறவை பாகிஸ்தான் முற்றிலும் நிறுத்திக்கொண்டது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: ஜி7 உச்சிமாநாட்டை கேம்ப் டேவிட்டில் நடத்தலாம் - ட்ரம்ப்