மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் விளையாட்டுத் துறையில் மேரி கோம், பி.வி. சிந்து ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது மேரி கோமிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குத்துச்சண்டை வீராங்கனையும், மாநிலங்களவை உறுப்பினருமான மேரி கோம் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர். மேலும், ஆறு முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை பெற்றவர் ஆவார்.
நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் விருது பி.வி. சிந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்மிண்டன் வீராங்கனையான இவர் 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஆவார். கடந்தாண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் இவர் தங்கம் வென்று வரலாறு படைத்தார். முன்னதாக 2015இல் பி.வி. சிந்துவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு