மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அமித் சுக்லா. இவர் நேற்று இரவு 'சொமேட்டோ' (ZOMATO) உணவு செயலி மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த உணவு டெலிவரிக்காக சொமேட்டோ ஊழியரிடம் தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் முஸ்லீம் என்பதால் அந்த ஆர்டரை ஒரு இந்து டெலிவரி பாய் மூலம் அனுப்பவேண்டும் என அந்த வாடிக்கையாளர் கோரியுள்ளார். ஆனால் சொமாட்டோ நிறுவனம் அவ்வாறு மாற்ற முடியாது என கூறியது. இதனால் அந்த நபர் ஆர்டரை ரத்து செய்து, அதற்குரிய தொகையான 237 ரூபாயையும் செலுத்தியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவை சிறிது நேரத்துக்கு முன்னர் ரத்து செய்தேன். இந்து அல்லாத ஒருவர் மூலம் எனது உணவை அவர்கள் கொடுத்து அனுப்பினர். அவரை மாற்ற முடியாது என்று சொன்னார்கள். பணத்தையும் திரும்ப கொடுக்கமுடியாது என்றும் சொல்லிவிட்டனர்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக சொமட்டோ நிறுவனத்தில் இது வரை உணவு ஆர்டர் செய்ததில்லை. ஆனால் இனி செய்வேன் என்று நினைப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.