ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370ஆவது பிரிவை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், “காஷ்மீர் விவகாரத்தில் ஏதோ தவறான நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி ஒரு பேரழிவு நடவடிக்கையைச் செய்வார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
ஜம்மு-காஷ்மீரைப் போலப் பிற மாநிலங்களும் பிரிக்கப்படலாம். மோடி அரசு நீடித்தால் நாடு சிதறுண்டு போய்விடும். இந்த நாள் இந்தியாவின் அரசியலமைப்பு வரலாற்றில் கருப்பு நாள்" என்று கூறினார்.
இதையடுத்து பேசிய குலாம் நபி ஆசாத், பாஜக வாக்கு வங்கிக்காக ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டது. காஷ்மீர் மாநிலத்தின் ஒற்றுமையுடன் நேர்மையுடன் பாஜக விளையாடுகிறது எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.