இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தரப்பிலிருந்து இதற்குப் பதில் கருத்துக்கள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் இருக்கின்றன. இதற்கிடையே போபால் தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர், காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேச பக்தர் என்ற வகையில் சர்ச்சை கருத்தை முன் வைத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தற்போது கிளம்பியுள்ளது.
பிரக்யா சிங் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்ர் பக்கத்தில், நாதுராம் கோட்சே தேசபக்தன் என்றால், நான் தேசவிரோதியாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எந்த ஒரு வங்காளியும் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலையை உடைக்கும் செயலை செய்யமாட்டார்கள். சிலை உடைத்த குற்றவாளிகள் வெளியாட்களாகத்தான் இருப்பார்கள். யார் அவர்களை வங்கத்திற்குக் கொண்டுவந்தார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சிதம்பரம்.
அதேபோல், மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், 'உலகம் மானுட நேயத்தை இழந்திருந்தபோது இந்தியாவின் வழிகாட்டியாக விளங்கியவர் மகாத்மா காந்தி. நாம் ஏழைகள் என்று ஏங்கிக்கொண்டிருந்த மக்களை ஊக்கம் கொடுத்து எழச்செய்தவர் காந்தி. இந்த எண்ணம் நம்மை விட்டு விலகினால் சிலை உடைக்கும் தாலிபான் கூட்டமாக மாறுவோம்' என வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.