மத்தியில் ஆளும் பாஜக அரசால் தொடர்ச்சியாகப் பல சட்டத்திருத்தங்களும், புதிய சட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இச்சட்டங்களில் பெரும் விவாத பொருளாகியிருப்பது, என்ஐஏ, யுஏபிஏ ஆகிய சட்டங்கள் தான்.
இதில் யுஏபிஏ என்பது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பதாகும். அதாவது இச்சட்டத்தின் உட்கூறுகள், தனிநபர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும், சமூக ஆர்வலர்களை, தீவிரவாதி என முத்திரைகுத்தி, மத்திய அரசு ஒடுக்க நினைப்பதாகவும், மக்களவை உறுப்பினர்களான மகுவா மொய்த்ரா, ஓவேசி ஆகியோர் கடுமையாக எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர். அப்படி இருந்தும், மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில், விவாதத்துக்கு வந்த இந்த மசோதா குறித்துப் பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் ப. சிதம்பரம், “இந்த சட்டம், தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு தனி நபரையும், ஒடுக்கும் வண்ணம் வரையப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் மீது போடப்படும் வழக்குகளை, இச்சட்டமானது வேறு திசையில் கையாளும். இச்சட்ட வரைவு அமலுக்கு வரும் நிலையில், பட்டியலில் சேர்க்கப்படும் முதல் நபர் யார் என்பதைக் காணும் போது தான் இதன் கட்டமைப்பு புலப்படும்.
அந்த முதல் நபர், பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபராக இருந்தால் நல்லது தான். அதுவே மாறாக மக்களின் உரிமைகளுக்காகப் போராடும், சமூக ஆர்வலர்கள் பெயர் இடம்பெற்றால், ஒவ்வொரு குடிமகனும் இந்நாட்டில் பயத்துடன் வாழும் நிலை ஏற்படும்” எனக் கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார்.