இமாச்சல் பிரதேச மாநிலம் மணாலியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், வீடுகள், மரங்கள், மலைகள் என அனைத்து இடங்களிலும் பனி படர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் முக்கிய சாலைகளில் பனிக்குவியல்கள் கிடைப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதில் அடல் சுரங்கப்பாதையின் தெற்கு பகுதி மற்றும் மணாலியில் உள்ள சோலங் நல்லா பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர். கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன இயக்கம் மந்தமாகியுள்ளது.
இதில் வாகனங்கள் வழியில் சிக்கிக் கொண்டதால் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் மணாலியில் இருந்து பயணிகள் வெளியேற முடியவில்லை. என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் சிக்கித் தவித்துள்ள பயணிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர். மீட்பு வாகனங்களின் உதவியுடன் பயணிகளை பத்திரமாக மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், ஜனவரி 5ஆம் தேதி லேசான மழையும், கடும் பனி பொழியும், மேலும் ஜனவரி 3 முதல் 5ஆம் தேதி வரை மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.