உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கரோனா பரிசோதனைகளை அதிகரித்ததால் தான் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்தது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நோய் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு நாள்தோறும் சராசரியாக 8 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக தென்கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆர்டி பிசிஆர் உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கரோனா பாதிப்புகளைக் கண்டறிவதற்காக இதுவரை மொத்தம் மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 ஆயிரத்து 975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்து 67 ஆயிரத்து 323 ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை 58 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு விகிதம் 1.86 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 4 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. 7 லட்சத்து 4 ஆயிரம் 348 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
உலகளவில் இந்தியாவில் ஆக. 4ஆம் தேதியிலிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகிவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.