குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மற்றும் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.2 ஆயிரத்தை நிவாரணமாக வழங்கினார்கள்.
இது குறித்து அம்ரேலி மாவட்டத்தின் டிட்லா கிராம விவசாயிகள் கூறுகையில், “விவசாயிகள் உதவி திட்டத்தின் கீழ் அரசாங்கம் எங்களை கவனித்துக் கொள்கிறது.
இப்போது நாங்கள் அரசாங்கத்துக்கு உதவும் நேரம் வந்துவிட்டது. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பல விவசாயிகள் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.2 ஆயிரம் வீதம் பணம் அனுப்பி உள்ளோம்” என்றனர்.
இதேபோல் பாவ்நகரைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.2 ஆயிரம் வழங்கினார்கள். ஆக இரு மாவட்டங்களிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட பாஜக தலைவர் திலீப் சங்கானி கூறுகையில், “அம்ரேலியைச் சேர்ந்த 200 விவசாயிகள் முன்வந்து தலா ரூ.2 ஆயிரம் காசோலைகளை வழங்கினார்கள். இதேபோல் பாவ்நகர் மாவட்ட விவசாயிகளும் ரூ.2 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளனர்” என்றார்.
ரூபாவதி கிராம விவசாயி விக்ரம் சிங் கோஹில் கூறும்போது, “எங்கள் கிராமத்தின் அறுபது விவசாயிகள் கிசான் நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்” என்றார்.
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் நெருக்கடி காலத்தில் எப்போதுமே தோள் கொடுக்க தவறுவதில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.