ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. தேர்வு நடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், பொதுப் பிரிவுக்கான ஆசிரியர்கள் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளனர்.
தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பொது பிரிவுக்கான 1,167 இடங்களில் பழங்குடியினத்தவரை நியமிக்க வேண்டும் என அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் வன்முறையாக வெடிக்க காவல்துறையினர் தாக்கப்பட்டனர். பொது சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. துங்கார்ப்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது.
759 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளிவந்த வீடியோக்கள் மூலமாகவும் சிசிடிவி மூலமாகவும் குற்றத்தில் ஈடுபட்டோரை கண்டறிந்துள்ளோம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழங்குடியின நல அமைச்சர் அர்ஜுன் சிங் சந்தித்துப் பேசினார்.
இதையும் படிங்க: கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணின் ஆடைகளை கழட்ட வைத்தவர் கைது