பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்யவுள்ளார். அதற்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் குடியரசுத் தலைவர் உரை இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டு கூட்டத்தொடரில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றுவதற்கு முன்பாக இருந்த உரிமைகளும், வசதிகளும் தற்போதும் உள்ளது என்பதை எனது அரசு தெரிவிக்க விரும்புகிறது. அவை நீக்கப்படவில்லை.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், புதிய வேளாண் சீர்திருத்தங்கள் மூலம் அரசு புதிய வசதிகளையும் உரிமைகளையும் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது" என்றார். டெல்லியுடனான ஹரியானா, உத்தரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, உழவர் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ஆகிய சட்டங்களை நீக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை பாதிக்கப்படும் எனவும் கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்திருப்பது போன்ற நிலை உருவாகும் எனவும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.