இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் அரசின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் எழுந்துள்ளது. அப்படி ஊரடங்கைப் பின்பற்றாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துவருகிறது.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாகச் சட்டப்பிரிவு 188இன் கீழ் சுமார் 1.02 லட்ச வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவர்களில் 19 ஆயிரத்து 297 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை மகாராஷ்டிர காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர காவல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "காவல் துறையினர் மீது தாக்குதல்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் 194 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் 73 காவலர்கள் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக 690 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல சனிக்கிழமை வரை சுகாதாரத் துறை பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 32 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுதவிர தேவையின்றி வீடுகளைவிட்டு வெளியே வந்ததற்காக 54 ஆயிரத்து 611 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு ஆயிரத்து 289 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன" என்றார்.
ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக இதுவரை 3.76 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. அம்மாநிலத்தில் இதுவரை 20 ஆயிரத்து 228 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 779 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர உயர் பொறுப்பில் உள்ள 81 பேர் உள்பட 714 காவல் துறையினருக்கு மகாராஷ்டிராவில் கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் போராட்டம்!