கரோனா தொற்றின் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால், ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். பல தனியார் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
அந்த வகையில், ஹரியானாவில் தனியார் நிறுவனத்தில் சுமார் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ரிங்குவுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. பல நிறுவனங்களில் வேலை தேடியும் கிடைக்காத காரணத்தினால், சாலையோரம் காய்கறிகள் விற்பனை செய்யும் தொழிலை செய்ய அவர் முடிவு செய்தார்.
இவரின் நண்பர்கள் பலரும் லாக் டவுனில் இத்தகைய சிறுசிறு வேலைகளை செய்து வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க போராடி வருகின்றனர். இருப்பினும் கவுரவத்தை இழக்காமல் சுயமாகப் பணியாற்றி பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது பெருமையாக உள்ளது என்கிறார் ரிங்கு.
இது குறித்து அவர் கூறுகையில், "இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. வாழ்க்கையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு கண் விழிக்கிறேன். காய்கறிகளை வாங்க சந்தைக்குச் சென்றுவிட்டு எனது வண்டியில் சுமார் 12 மணி நேரம் பயணித்து விற்பனை செய்கிறேன்.
பைக் மூலம் காய்கறி விற்பனை செய்யும் வண்டியை வாங்க லோன் எடுத்தேன். காய்கறிகளை விற்க தெருக்களுக்குள் செல்வதால் ஒலிப்பெருக்கிகளை வண்டியில் பொருத்தியுள்ளேன். சுமார் 70 முதல் 80 ஊழியர்கள் எனது நிறுவனத்தில் பணிபுரிந்தனர். ஆனால் பூட்டப்பட்டதால், அனைவரும் வேலையில்லாமல் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்துள்ளனர் சிலர் மட்டுமே சிறிய வேலைகளைச் செய்து வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.