தமிழ்நாடு சட்டப் பேரவையில் எடப்பாடி அரசின் மீது நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கினை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவிடம் இவ்வழக்கினை அடுத்த வாரம் விசாரிக்க கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி போப்டே மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது பற்றி பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். அப்போது, சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் நின்றார்.
இந்தச் சூழலில் பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமானது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று கொண்டு வரப்பட்டது. அப்போது ஓபிஎஸ், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேர் சேர்ந்து பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதற்கிடையே சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து ஒதுக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அப்போது முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் முறையிட்டனர். இதன்பேரில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இதற்கிடையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவரது அணியில் இருந்த எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக்கப்பட்டார். இந்தச் சூழலில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சபாநாயகருக்கு உண்டான அதிகாரத்தில் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கூறியதையடுத்து, திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ள இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி பாப்டே கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சருடன் பினராயி விஜயன் விரைவில் சந்திப்பு