கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாக்கள் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பின்போது மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறியும் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மசோதாக்கள் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பின்போது அமளியில் ஈடுபட்ட எட்டு மாநிலங்களவை உறுப்பினர்களை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இடைநீக்கம் செய்தார்.
அவைத்தலைவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எட்டு எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய மசோதாக்கள் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இன்று மாலை ஐந்து மணிக்கு சந்திக்கவுள்ளனர். முன்னதாக, குடியரசு தலைவரை சந்திக்க எதிர்க்கட்சியினர் நேரம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்து.
கோவிட்-19 காரணமாக குடியரசு தலைவரை சந்திக்க ஐந்து எம்.பி.க்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "திருக்குறள் ரெபரென்ஸ்...கார்ப்பரேட்டுகளுக்கான நாடாகும்" - திருச்சி சிவா விமர்சனம்!