மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை கடந்த திங்கள்கிழமை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இதே கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகளை அவமதிக்கும் விதத்தில் அரசு செயல்படுகிறது. குடியரசுத் தலைவரிடம் இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியுள்ளோம் என்றார்.
மேலும், மத்திய அரசு விவசாயிகளிடமோ, நாடாளுமன்றத்திலோ எந்தவித விவாதம், ஆலோசனை மேற்கொள்ளாமல் இதுபோன்ற முக்கிய முடிவை மேற்கொண்டுள்ளது சரியல்ல என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: நெருங்கும் ஒரு கோடி பாதிப்பு; கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து தப்புமா இந்தியா?