டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா , விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இம்மசோதாக்கள் சட்டமாகின.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணானது, சட்டவிரோதமானது என்றும்; அதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு மீதான விசாரணை இன்று, நீதிபதி எஸ்.ஏ பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்கள் நாட்டின் விவசாயக் கட்டமைப்பை அழித்துவிடும் - ராகுல் காந்தி