வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து இவை சட்டமாக மாறின.
ஆனால், மத்திய அரசின் இந்த வேளாண் சட்டங்களுக்கு, காங்கிரஸ், திமுக இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. மேலும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையே வேளாண் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணானது, சட்டவிரோதமானது, செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டிரிய ஜனதாதள எம்.பி. மனோஜ்குமார் ஜா, வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா, சட்டீஸ்கர் கிசான் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (திங்கள்கிழமை) விசாரிக்கிறது.