துபாயிலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள துாதரகத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் வந்த பார்சலில், தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக துாதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் ஆகியோரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கை, தேசிய புலனாய்வுத் துறை, சுங்கத் துறை, அமலாக்கத் துறையினர் ஆகியோர் இணைந்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே கிடைத்த தகவலின்படி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல், கேரள உயர் கல்வித் துறை அமைச்சரான ஜலீல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயரில், முஸ்லிம்களின் புனித நூலான குரானை இறக்குமதி செய்து அதை, தன் தொகுதி மக்களுக்கு விநியோகம் செய்ததும் தெரியவந்தது.
ஆனால், குரான் வந்ததாகக் கூறப்படும் பார்சல்களில் குரான் தவிர, தங்கமோ அல்லது வெளிநாட்டுப் பணமோ கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து, அமைச்சரை அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனால் அமைச்சர் ஜலீலுக்கு தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புள்ளது என்று கூறி அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவை வளாகம் முன்பாக தொடர்ந்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், பாஜக, மாணவர் சங்கம் என ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல் துறையினருக்கும் - ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
இந்தநிலையில் சட்டப்பேரவை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, யுவ மோர்ச்சா, மஹிலா மோர்ச்சா, இளைஞர் காங்கிரஸ், கேரள மாணவர் சங்கம் ஆகிய மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது கரோனா ஊரடங்கை மீறியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எட்டு எம்.பி.க்கள் அதிரடி சஸ்பெண்ட்