நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தி மண்டலமாக மகாராஷ்டிராவிலுள்ள நாசிக் பகுதி திகழ்கிறது. இந்தப் பகுதி விவசாயிகள், தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடிகளை சந்தித்துவருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி சந்தோஷ் கூறுகையில், “எங்கள் விளைச்சலை சாக்கு மூட்டைகளில் கட்டி கொண்டுவருமாறு சந்தை வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதனால் எங்களுக்கு கூடுதலாக ரூ.100 செலவாகும். மேலும், தொழிலாளர் கட்டணம், போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளும் உள்ளது. தற்போது எங்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு 500-600 வரை வருவாய் கிடைக்கிறது. ஆனால் செலவுகள் சமமாக உள்ளன. வாடிக்கையாளர்கள் சந்தைகளுக்கு வருவதில்லை. வெங்காயத்தின் விலையும் குறைந்துவிட்டது. மழைக்காலம் வரவிருக்கிறது. சில விவசாயிகளுக்கு மட்டுமே அவற்றை சேமிக்க இடம் உள்ளது.
அதே நேரத்தில் உற்பத்தியும் இல்லை. ஆகவே அரசு எங்களுக்கு சில உதவிகள் வழங்க வேண்டும். அரசாங்க உதவி கிடைக்காவிட்டால், எதிர்வரும் நாள்களில் பிரச்னைகள் மேலும் ஆழமடையும். விலை ஏற்றத் தாழ்வுகளை நீக்க, அரசாங்கம் எங்களிடம் இருந்து வெங்காயங்களை வாங்க வேண்டும். இதனால் எங்களுக்கு குறைந்தப்பட்சம் வருவாய் கிடைக்கும்” என்றார்.
விவசாயி சந்தோஷின் கருத்துக்கு மொத்த வியாபாரி ஒருவரும் உடன்பட்டார். அந்த வியாபாரி கூறுகையில், “விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களுக்கு சரியான விலையைப் பெறவில்லை. உற்பத்தி, தேவை, அளிப்பு உள்ளிட்ட காரணிகள் இடையே ஏற்ற- இறக்கங்கள் தொடர்வதால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைகிறது. போக்குவரத்து சிக்கல்களும் உள்ளன. வாடிக்கையாளர்கள் சந்தைக்கு வந்து பொருள்கள் வாங்கும் சூழல்வரும் வரை, எங்களால் அவர்களுக்கு உதவ முடியாது” என்றார்.
மேலும், விவசாயிகள், “குரலற்றவர்கள்” என்றும் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.