ரயில் விபத்துகளினால் தண்டவாளங்களில் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் தரணிபூர் தேயிலைத் தோட்டப் பகுதியில் ரயில் தண்டவாள பாதை உள்ளது. இன்று காலை அப்பகுதியில் சிலிகுரி துப்ரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது யானை ஒன்று தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்ததால் ரயில் யானை மீது நேரடியாக மோதியது.
இந்த விபத்தில் யானையின் முகம், தந்தம், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளித்து வருகின்றனர்.விபத்து நடந்த இடம் யானைகள் உலாவும் இடம் என்பதால் அப்பகுதி வழியாக வரும் ரயில்கள் ஒலிப்பானை ஒலித்து ரயிலை இயக்குவது வழக்கம். இந்நிலையில், அதிக வேகத்தில் ஓட்டுனர் ரயிலை இயக்கியதோடு ஒலி எழுப்பாமல் வந்தததே விபத்திற்குக் காரணம் என அப்பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுபோன்ற விபத்துக்களை தடுக்க மின்சார வேலிகள் அமைத்து சமிக்ஞை விளக்குகளும் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.