மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் இரு தேர்தல் நடைபெற்றால், தேர்லுக்கான செலவு குறையும். எனவே தேர்தல் ஆணையம் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டது.
எனவே, இது தொடர்பாக விவாதிக்க மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு அனுப்பி உள்ளார். இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில், 2022ஆம் ஆண்டு நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவது, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், மத்திய நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனிய காந்தி, பிரதமர் அழைத்துள்ள கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, இன்று காலை முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
அனைத்துக் கட்சியினர் மத்தியிலும் ஒருமித்த கருத்தை எற்படுத்துவது மிகவும் கடினம். ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற யோசனை நடைமுறையில் சாத்தியமற்றது என முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.