ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபோர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் பெண் குழந்தை உள்பட நான்கு பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தன் ட்விட்டர் பக்கத்தில், பயங்கரவாதிகளின் இரக்கமற்ற தாக்குதல் என ஜம்மு-காஷ்மீர் காவல் துறை குறிப்பிட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர்களின் நிலை சீராக உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. முன்னதாக, ஆகஸ்ட் 29ஆம் தேதி ஸ்ரீநகர் பாரிம் போரா பகுதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவருவதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் தகவல் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதிகள் நீக்கப்பட்டதிலிருந்தே இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.