இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் நீதியை காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, இதுதொடர்பாக உத்தரப்பிரதேச அரசு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என்றும்; பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பினையும் அளித்து வருவதாகவும் உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகத்தினரிடம் பேசிய உத்தரப்பிரதேச மாநில சமூக நீதி மற்றும் மேம்படுத்துதல் துறைக்கான அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, ' ஹத்ராஸ் சம்பவத்தில் அரசு, குற்றவாளிகளைக் கண்டறிய பருந்து பார்வையில் ஆய்வு செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் இருந்து நேரடியான உத்தரவுகள், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு வந்துள்ளது. குற்றவாளிகள் எங்கும் தப்பமுடியாது' என்றார்.
இது தொடர்பாக மேலும் வருத்தத்துடன் பேசிய கட்டாரியா, ' மிகுந்த நுண்ணறிவாற்றலுடன் செயல்பட்டு, இந்த வழக்கை பின் தொடர்ந்து வருகிறோம். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இவ்விவகாரம் தொடர்பாக ஹத்ராஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும், துணை காவல் கண்காணிப்பாளரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவர்கள் அம்பேத்கரை போல, நெஞ்சுரத்துடன் நடக்கவேண்டும் என பிரதமர் விரும்புகிறார். ஹத்ராஸ் வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரையும் யோகி ஆதித்யநாத் அரசும், மத்திய பாஜக அரசும் ஒருபோதும் காப்பாற்றாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது' எனத் தெரிவித்தார்.
மேலும் ஹத்ராஸ் சம்பவத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து பேசிய கட்டாரியா,'ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் உத்தரப்பிரதேசத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நல்ல அரசை தான் விரும்புகின்றனர், இவர்களின் நாடகத்தைப் பார்க்க விரும்பவில்லை' என்றார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு ரூ.25 லட்சமும் ஒரு வீடும் சில அரசு சேவைகளையும் வழங்க முன் வந்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர், தங்களுக்கு உரிய நீதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மேலும் இளம் பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், கர்ப்பப்பை, முதுகெலும்பு ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.