மங்களூரில் உள்ள கோபாலகாஜி எனும் கிராமத்தில் பிறந்தவர் சுசீலா. இவருக்கும், குன்யக்கா மகன் மாதவாவுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இருவரின் வாழ்வும் சந்தோசமாக நகர்ந்தது. ஆனால், இந்த சந்தோசம் நீடிக்கவில்லை. ஒரு வாகன விபத்தில் மாதவா பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நேரத்தில் சுசீலா கருவுற்று இருந்தார். சில மாதங்களுக்கு பின் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைதான் உலகம் என்று வாழ்ந்திருந்த சுசீலாவுக்கு, மறு திருமணம் செய்து வைக்க வேண்டும் மாதவாவின் தாயார் குன்யக்கா விருப்பப்பட்டார். குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட சுசீலா, இதற்கு முதலில் மறுத்த தெரிவித்தார். தொடர் வற்புறுத்தலை அடுத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து தனது மருமகளுக்காக மாப்பிள்ளை தேடலில் குன்யக்கா தீவிரம் காட்டத் தொடங்கினார். ஜெயபிரகாஷ் என்பவர் திருமணம் செய்ய முன்வந்தார். இதையடுத்து திருமணம் ஏற்பாடு வேகமாக நடந்து வந்தது. தனது மகன் திருமணம் நடந்த கோயிலில், இந்தத் திருமணத்தையும் நடத்த முடிவு செய்தார். இதன்படி இன்று இருவீட்டார் முன்னிலையில், சுசீலா-ஜெயபிரகாஷ் திருமணம் ஜோராக நடந்தது. உறவினர்கள் பூக்கள் தூவி, அர்ச்சனை போட்டு தம்பதியை வாழ்த்தினர்.
மகனின் இறப்புக்கு பிறகு தானே மாப்பிள்ளை பார்த்து மருமகளுக்கு மாமியார் திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.