பிரபல வாடகை கார் நிறுவனமான ஓலா பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி, தங்களது வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. காரில் தொடங்கிய இந்த நிறுவனத்தின் பயணம் ஆட்டோ, பைக் டாக்சி என விரிவடைந்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், ஓலா நிறுவனம் தனது அடுத்த முயற்சியாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக, நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாம் பகுதியில் இயங்கும் பிரபலமான Etergo நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் நிதி விவரங்கள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் கூறுகையில், "உலகின் எதிர்காலம் மின்சாரத்தை மையமாகக் கொண்டு தான் இருக்கும். கரோனா காலத்திற்குப் பிறகு உலகளவில் வாகனங்களில் மின்சார வசதியை விரைவுப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கக்கூடும். ஆண்டுதோறும், கார்கள் விற்பனையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரு சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக உள்ளது.
மின்சார, டிஜிட்டல் வசதி இணைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் தான் உலகெங்கிலும் மக்கள் அதிகம் விரும்பும் வாகனமாக இருக்கக் கூடும். இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வடிவமைப்பிலும், உற்பத்தியிலும் உலகளவில் சிறந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
Etergo நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது. இந்நிறுவனம் புதுமையான வடிவமைப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளதால் இந்திய மக்களிடம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இதையும் படிங்க: சம்பள குறைப்பு அறிவித்த டிவிஎஸ் மோட்டார்ஸ்!