ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றபின் ஜெகன் மோகன் ரெட்டி, மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்திவருகிறார். இவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பல புதிய திருப்பங்களை ஏற்படுத்துவதுண்டு. இவர் சமீபத்தில் அக்டோபர் 4ஆம் தேதியன்று ஆந்திராவில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்காக 'வாகன மித்ரா' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆட்டோவின் பராமரிப்புப் பணிகளுக்காக ஓட்டுநர்கள் ஆண்டுக்கு 10 ஆயிரம் பெற முடியும். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அக்டோபர் மாதம் இறுதிவரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் சொந்த ஆட்டோ வைத்திருப்பவர்கள் மட்டுமே பணம் பெற முடியும், வாடகை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இந்தத் திட்டம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆந்திராவில் பல்வேறு இடங்களிலும் சாலைப் போக்குவரத் துறை அலுவலர்கள், ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆட்டோக்களில் ஒட்டப்படும் அந்த ஸ்டிக்கரில் ஆட்டோ ஓட்டுநர்கள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவிப்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ஆட்டோ ஓட்டுநர்களுக்காக முதலமைச்சர் அறிமுகம் செய்த புதிய திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஸ்டிக்கர்களை ஒட்டிவருகிறோம். ஆட்டோ ஓட்டுநர்களும் நன்றி தெரிவிக்க விரும்பியதாக அவர் கூறினார்.
திட்டத்தை தொடங்கியதோடு மட்டுமல்லாது அந்தத் திட்டத்திற்கு அரசே நன்றியையும் ஸ்டிக்கர்களாக தயாரித்து ஒட்டிவருவதை சில சமூக பொறுப்பாளர்கள் விமர்சனம் செய்தனர். தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது வெள்ள நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அச்சமயத்தில் இந்த நிகழ்வு பெரும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளானது. தற்போது அதே பாணியில் ஆந்திர முதலமைச்சரும் களமிறங்கியிருக்கிறாரோ என்ற ஐயமும் எழுகிறது.