பெங்களூருவில் உள்ள மரதஹல்லியில், பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த பெண்ணை, அவருடைய ஆண் நண்பர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து திடீரென்று சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து படுகாயமடைந்து கீழே விழுந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இன்று அதிகாலை மரதஹல்லி பாலத்துக்கு அருகில் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் காயங்களோடு சுயநினைவின்றி கிடந்தார். பின்னர் அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெண்ணை சுட்ட அவரது நண்பர் மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்பவர் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பெங்களூரில் இருவருடங்களாக வசித்து வருகிறார். தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இருவரும் ஒடிசாவை சேர்ந்தவர்கள். பெண்ணை சுட்ட நபர் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களைப் பார்க்கும்போது, அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பார் எனவும் தெரிகிறது.
இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், மேற்கொண்டு எவ்விதவிசாரணையும் நடத்தப்படவில்லை. அவர்கள் சுயநினைவுக்கு வந்த பின்னரே விசாரணையை நடத்த முடியும் என்று பெங்களூர் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: டெல்லி வன்முறை: உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு பாஜக ரூ.1 கோடி நிவாரணம்