கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அமல்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையிலும் அதேசமயம் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் ஒடிசா மாநிலத்தில் உள்ள 11 மாவட்டத்தில் வீக்எண்ட் ஷட்டவுன் என்ற புதிய அறிவிப்பை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.
அதன்படி கஞ்சம், புரி, கட்டாக், தயார், கோர்டா, ஜகஸ்டிங்பூர், கேந்திரபாரா, ஜஜ்பூர், பத்ராக், பாலாசோர், பாலாங்கிர் ஆகிய 11 மாவட்டத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் பணி நாட்களாவும், சனி ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என்ற புதிய அறிவிப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இரு நாள்களில் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவை சார்ந்த பணிகளான மருத்துவம், தீயணைப்புத்துறை, தூய்மை உள்ளிட்ட பொது சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் அடையாள அட்டையை உடன் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஒடிசா மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரி, கல்வி சார்ந்த நிறுவனங்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் இதுவரை 2,388 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1416 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தொழிலாளர்கள் போராடவேண்டியது மத்திய அரசை எதிர்த்து, மாநில அரசை அல்ல'- நாராயண சாமி