ஒடிசா மாநிலம் மயூர்பாஞ்ஜ் மாவட்டத்தில் உதானினுவாகான் கிராமத்தில் குளத்தின் அருகே மீன் வலைக்குள் சிக்கிக்கொண்ட பாம்பு ஒன்று வெளியே வர முடியாமல் தவித்தது.
இந்நிலையில் இதனைக் கண்ட சிறுவர்கள் இரண்டு பேர், பாம்பை வெளியே கொண்டுவர முயற்சித்தனர். கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி பாம்பை பத்திரமாக வலையிலிருந்து மீட்டு வெளியே விட்டனர். பின்னர் அந்தப் பாம்பு விஷத்தன்மையற்றது எனத் தெரியவந்தது.
கால்நடை மருத்துவர் சஷ்சாங்கா சேகர் பணிக்ராஹி இது குறித்து கூறுகையில், 'இந்தக் குழந்தைகள் விலங்குகளிடம் பரிவு காட்டும் குணம் பாராட்டுக்குரியது. வலைக்குள் சிக்கியிருந்த பாம்பைக் கண்டதும், அதனை பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது மிகவும் ஆபத்துக்குரிய ஒன்று. ஏனென்றால், அவர்களுக்கு இது விஷத்தன்மை உடையதா-இல்லையா என்பது தெரியாது. இன்னொருமுறை இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் பெற்றோர்கள் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என அவர் தெரிவித்தார்.