புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கே.நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சி பரப்புரையை தொடங்கியுள்ளது. அங்குள்ள செட்டிகுளம் பகுதி விநாயகர் கோயிலில் பூஜை செய்துவிட்டு அக்கட்சித் தலைவர் ரங்கசாமி தனது பரப்புரையை தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், "புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்துவரும் முதலமைச்சர்நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை பணக்கார வேட்பாளர் எனக் கூறிவருகிறார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னாள் சபாநாயகர். அவரது குடும்பம் முன்னாள் முதலமைச்சர்குடும்பம் என்பதை மறந்துவிடக்கூடாது. இதில் யார் பணக்காரர்கள்?பதவி காலியாகிவிடும் என்ற பயத்தினாலும்தோல்வி பயத்தினாலும்தான் முதலமைச்சர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடவில்லை. தோல்வியுற்றால் தனது இடத்தில் அமைச்சர் நமச்சிவாயம் முதலமைச்சராகிவிடுவார் என்ற பயத்தின் காரணமாகவும் முன்னாள் சபாநாயகர் அங்கு களமிறக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள புதுச்சேரியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால்தான் மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைக்கும். அதை விட்டுவிட்டு மத்திய அரசுடனும் ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்தால் யாருக்கும் லாபமில்லை, பாதிக்கப்படுவது பொதுமக்களே. எனவே மக்கள் இதை உணர்ந்து ஜக்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.