குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் ஏராளமான சிங்கங்கள் உள்ளனர். இங்கு பணியிலிருக்கும் பெண் வனத்துறை அலுவலர்கள் மிகவும் பொறுப்பாக காடுகளையும், சிங்கங்களையும் கவனித்து வருவதாக ஜூனகத் வட்டத்தின் தலைமை வனவிலங்கு அலுவலர் டி.டி. வசாவதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கிர் காட்டில் கடந்த சில காலமாக பெண் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிர் வனத்துறையில் மாநில,மத்திய அரசுகள் விதித்துள்ள பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பீட் காவலர்கள், ஃபாரெஸ்டர், ரேஞ்ச் வன அலுவலர்கள், துணை வனப் பாதுகாவலர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் 70க்கும் அதிகமான பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுவரை வனத்துறையில் ஆண்கள் ஆதிக்கமே அதிகளவில் இருந்த நிலையில், கடந்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் பெண்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர். காட்டின் ராஜாவான சிங்கத்தை அச்சமின்றி பெண்கள் பொறுப்புடன் கவனித்து வருகிறார்கள்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.