மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி கல்லூரியின் பி எஸ்சி பாடப்பிரிவு தகுதிப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பட்டியல் தயார் செய்யும் பணியானது கல்லூரி நிர்வாகம் சார்பில் தனியார் நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தகுதிப் பட்டியல் தயாரிக்கும்போது குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும், உலகப் புகழ்பெற்ற கார்டூன் கதாபாத்திரமாக ஷின் சானின் பெயர் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பேசிய அந்நிறுவன ஊழியர்கள், "தகுதிப் பட்டியல் தயாரிக்கும் சமயத்தில் கார்ட்டூன் கதாபாத்திரமான ஷின் சானின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக அப்பெயரை நீக்கவிட்டு புதிய பட்டியலை கல்லூரி இணையத்தில் பதிவேற்றினோம். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு மாணவர்களின் விவரங்கள் நிச்சயம் ஆராயப்படும்” எனத் தெரிவித்தனர்.
முன்னதாக, பாலிவுட் நடிகை சன்னி லியோன், பாடகி நேஹா கக்கர் ஆகியோரின் பெயர்களும் இதேபோல் கல்லூரி சேர்க்கைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.