இது தொடர்பாக கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி உயிர் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகள் கூறுகையில், "ரேபிட் பரிசோதனைக் கருவிகள் வெறும் 20 நிமிடங்களுக்குள்ளேயே கரோனா தொற்று குறித்து பரிசோதித்து முடிவுகளை வழங்கும். அதிகபட்சமாக 600 ரூபாய் மட்டுமே பரிசோதனைக்கு செலவாகும். இக்கருவிகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான இந்திய மருத்துவக் கவுன்சிலின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
தற்சமயம் கரோனாத் தொற்று சோதனைக்கு ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமெரஸ் செயின் ரியாக்ஷன் (RT- PCR)எனும் தொழில்நுட்பத்தை இந்தியா பின்பற்றி வருகிறது. இதன்படி கரோனாத் தொற்று குறித்து ஒருமுறை சோதனையிடுவதற்கு சுமார் 4000 முதல் 6000 ரூபாய் வரை செலவாகும். மேலும் முடிவுகளைத் தீர்மானிக்க குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் வரை செலவாகிறது.
ஆனால் இந்த புதிய பரிசோதனை கருவியைப் பொறுத்தவரை பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் நபரின் ஒரு சொட்டு ரத்தம் மட்டுமே தேவை. பரிசோதனையை மேற்கொள்ள மேம்பட்ட ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்களோ மருத்துவர்களின் இருப்போ அவசியமில்லை. அன்றாட ஆய்வகத் தொழிலாளர்களும், குறைந்தபட்ச பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுமே போதும். குளுக்கோமீட்டரைப் பயன்படுத்தி சர்க்கரை அளவை சோதிப்பது போல இது மிகவும் எளிமையானது. மேலும் இக்கருவிகளின் விலை 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆர்ஜிசிபி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர போராடிவரும் தற்போதைய இக்கட்டான நிலையில், அதிக அளவிலான கரோனாத் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள கேரள மாநிலத்திலும்கூட ஏழு அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்கள் மட்டுமே உள்ளன.
எனவே, ராஜீவ் காந்தி உயிர் தொழில்நுட்ப மையம் உருவாக்கியுள்ள இந்தக் கருவிகள் வைரஸ் தொற்றை சோதிப்பதில் உள்ள தடங்கல்களைப் போக்கி, அதிக அளவிலான பரிசோதனைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் வரும் நாட்களில் சமூக பரவல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்தக் கருவிகள் தொற்றை உறுதி செய்து விரைந்து நடவடிக்கை எடுப்பதில் பெரும் பங்காற்றும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து குணமடைவோர் இறப்போர் விழுக்காடு 80 : 20 - லாவ் அகர்வால்