சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் ( கொவிட்-19) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சீனாவில் இந்த வைரஸ் காரணமாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்கு வைரஸ் பரவாதென லண்செட் (The Lancet) இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில், "கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றிருந்துள்ளனர். ஆய்வுக்குள்ளான ஒரு கர்ப்பிணிப் பெண்ணின்கூடு உயிரிழக்கவில்லை. ஆனால், இந்த வைரஸ் அவர்களின் உடலில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
இருப்பினும், கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பெற்ற குழந்தைகளைக் கூடுதலாகக் கவனிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ஈன்ற குழந்தைக்குப் பிறந்த 36 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்த ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘பாஜக ஆட்சியில் இருக்கக் கூடாது... இதுதான் காங்கிரஸின் எண்ணம்’ - பாஜக சாடல்