கரோனாவால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் அது தீவிரத்தன்மையை அடைந்துவருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் எழுந்துள்ளது. வலைகுடாக்களில் 90 லட்சம் இந்தியர்கள் வேலை பார்த்துவரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 30 லட்சம் பேர் பணிபுரிந்துவருகின்றனர்.
இவர்கள் பாதுகாப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில், மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் இந்திய தூதுவர் நவ்தீப் சூரியிடம் நடத்திய சிறப்பு நேர்காணலின் தமிழாக்கம் இதோ...
கேள்வி: கரோனாவால் சுகாதாரப் பேரிடர் நிகழ்ந்துள்ள நிலையில் குடிபெயர்ந்த இந்திய தொழிலளர்களின் பாதுகாப்பு நிலை குறித்து உங்கள் பார்வை?
பதில்: ஒவ்வொரு வளைகுடா நாடுகளின் அரசும் தனித்தனி முறை செயல்பட்டுவருகிறது. எந்தத் தொழிலாளர்களும் மருத்துவ சிக்கலையோ, வாழ்வாதார சிக்கலையோ சந்தித்ததாகத் தெரியவில்லை. அனைத்து நாடுகளும் இதுவரை இந்த விவகாரத்தை சீரான முறையில் கையண்டுவருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிக்கல்கள் தென்படலாம். அனைத்து நாடுகளும் இன்றைய சூழலில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், வளைகுடா நாடுகள் மட்டும் இதிலிருந்து தப்பவில்லை. அப்படியிருக்க அனைத்து நாடுகளும் தங்களுக்கு ஏற்றார் போல் சூழலை எதிர்கொள்கின்றன.
கேள்வி: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அங்கு சிக்கியுள்ள இந்திய தொழிலாளர்கள் நோய் தொற்றால் பாதிக்கும் அபாயம் குறித்து பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கை குறித்து தங்களின் கருத்து?
பதில்: முதலில் இரு நாட்டு அரசுகளும் தங்களின் தூதுவர்களின் வாயிலாக சிக்கலை சீர் செய்யும் முயற்சியில் களமிறங்கும். பின்னர் தூதரக செயலர்கள் அனைத்து கள விவரங்களையும் சேகரித்து தொடர் பதிவுகளை தருவார்கள். இந்த சூழலில் வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். எனவே, இந்தப் பணியில் அரசு ஊழியர்கள் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. அவர்கள் மூலம் இரவு பகல் பாராமல் வேலை பார்த்து நிலைமை சீர் செய்யப்படும்.
கேள்வி: தங்கள் தொழிலாளர்களை சொந்த நாட்டிற்கு திரும்பப் பெறாத நாடுகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதிப்போம் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இருநாட்டு உறவு பாதிப்படையுமா?
பதில்: ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்த செய்தியை நாம் திரித்து புரிந்துகொள்கிறோம். சுற்றுலா விசாவில் சென்றவர்களையும், விசா காலம் நிறைவடைந்தவர்களையும்தான் திரும்பப்பெற வேண்டும் என அந்நாடு தெரிவித்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே, லட்சக்கணக்கில் இல்லை. கேரள முதலமைச்சரும் இவர்கள் குறித்துதான் தனது ஐயத்தை எழுப்பினார்.
கேள்வி: ஊரடங்கு நீட்டிப்பால் அங்கு ஏற்படப்போகும் வேலையிழப்பு அபாயம் குறித்து தங்களின் பார்வை?
பதில்: 90 லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள் வளைகுடாவில் பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கை மிகப்பெரியது. இவர்கள் அனைவரையும் இந்தியா அனுப்பும் திட்டத்தை எந்த நாடும் முன்வைக்காது. ஆம், சில பகுதிகளில் தற்காலிக வேலையிழப்பு ஏற்படலாம். ஆனால் இது அவசர காலத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக பின்னடைவே. எனவே, நாம் தேவையற்ற அச்சத்தை கொள்ள வேண்டியது இல்லை.
கேள்வி: மேற்கொண்ட வேலையிழப்பு பொருளாதார சிக்கலுக்கான தாக்கம் எவ்வாறு ரெமிட்டன்ஸ் தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும்?
இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும், குறிப்பாக கேரளா இதன் மூலம் கடும் பின்னடைவை சந்திக்கும். அதே வேளை வளைகுடா நாட்டில் உத்தரப் பிரேதசம், பிகார், தெலங்கானா மற்றும் பிற இடங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை செய்கின்றனர். கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மட்டும் 17 பில்லியன் அமெரிக்க டாலரும், வளைகுடா நாடுகளிலிருந்து 50 பில்லியன் அமெரிக்க டாலரும் ரெமிட்டன்ஸ் தொகை அனுப்பப்பட்டது. இது இந்தியாவின் 2 விழுக்காடு ஜி.டி.பி.யாகும். எனவே மேற்கண்ட மாநிலங்களில் இந்த தாக்கம் நிச்சயம் பிரதிபலிக்கும்.
இதையும் படிங்க: இருள் சூழ்ந்த நேரத்தில் இவர்தான் சிறந்த தலைவர்' - ட்ரம்ப் போட்டி வேட்பாளருக்கு ஒபாமா ஆதரவு