கரோனா வைரஸ் காரணமாக நாட்டில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பல்வேறு விமான நிறுவனங்களின் வருவாய் பெரிதாக பாதிக்கப்பட்டது. இதனால் அந்நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் ஊதியங்களை குறைக்கும் நடவடிக்கையிலும், ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
அந்த வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், விரைவில் தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதால் ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனிடையே, ஊழியர்களின் ஊதியங்களை குறைப்பதும், ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது தனது ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லாமல் விடுப்பில் அனுப்ப முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், இது கடுமையான முடிவு என்றும் ஏர் இந்தியா ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியாவின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜீவ் பன்சாலுக்கு அதன் ஊழியர்கள் கூட்டமைப்பினர் எழுதிய கடிதத்தில், ஊதிய ஒப்பந்தத்துக்கு எதிராக இந்த நடவடிக்கை இருப்பதால், இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 2020 முதல் எங்களது ஊதியத்தில் 70% வழங்கப்படவில்லை. தேசத்திற்கு விஸ்வாசமாக இருந்த ஊழியர்களின் ஊதியக் குறைப்பு முறையானதல்ல என அக்கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.