பாட்னா: இந்த ஆண்டு தேர்தல் எனது கடைசி தேர்தல் அல்ல, நான் பேசிய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், எதிர்காலத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட தொடர்ந்து அதே அர்ப்பணிப்புடன் பணியாற்ற விரும்புகிறேன் எனவும் நிதிஷ்குமார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிகாரில் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 74 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களை கைப்பற்றியுள்ளன. ஐக்கிய ஜனதா தளம் பாஜகவைவிட குறைந்த இடங்களை கைப்பற்றியிருந்தாலும் ஜே.டி.யூ கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரே முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாட்னாவில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு நிதிஷ்குமார் வருகை புரிந்தார். பின்னர் கட்சி தலைமையகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசவில்லை. ஒவ்வொரு தேர்தல் பரப்புரையிலும் இதைத்தான் கூறி வருகிறேன். தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நான் பேசியதை முழுமையாக கேட்டால் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். எல்ஜேபியை தேசிய ஜனநாயக கூட்டணியில் தக்க வைத்துக் கொள்வது குறித்து பாஜகதான் முடிவெடுக்க வேண்டும். இந்தத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
தேர்தல் பரப்புரையில் பேசிய நிதிஷ்குமார்
பூர்னியா பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நிதிஷ்குமார், "பிகாரின் வளர்ச்சிக்காக நாங்கள் உழைத்து வருகிறோம். இந்த மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதே எங்களது நோக்கமாக உள்ளது. இதுவே எனது கடைசி தேர்தல் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரத்தில் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்கக் கூடும் என தெரிவிக்கப்படும் நிலையில், தீபாவளி பண்டிகை அல்லது சாத் பூஜைக்குப் பிறகு பதவியேற்பார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கரோனா இல்லை!