மத்தியப் பிரதேம் மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத்துக்கு எதிராக இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடித் தூக்கியுள்ளார். கமல்நாத்துடனான பிளவு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
கமல்நாத்தும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங்கும் சிந்தியாவின் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டு சிந்தியா தரப்பிலிருந்து வைக்கப்படுகிறது. அண்மையில் சிந்தியா மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பியதாகவும், இதற்கு கமல்நாத், திக்விஜய் சிங் இருவரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிந்தியா தனது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் காங்கிரசிலிருந்து விலகப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரசிலிருந்து விலகும் சிந்தியா எதிரணியான பாஜகவுடன் இணைவார் என்ற செய்திகளும் உலாவிவருகின்றன. இந்தப் பிளவுக்கு பாஜக பின்னணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சரும் மாநில பாஜக தலைவருமான சிவ்ராஜ் சிங் சௌஹான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் காங்கிரசின் உள்கட்சி விவகாரம் என்றும் இதில் பாஜகவுக்குப் பங்கு இல்லை, காங்கிரஸ் ஆட்சியை கலைப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங்குடன் இணைந்து கமல்நாத் செயல்பட்டுவரும் நிலையில், மத்தியப் பிரதேச அமைச்சரவை நேற்றிரவு ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்துள்ளது. சிந்தியாவின் அதிருப்தி நடவடிக்கையைத் தடுக்க இறுதி ஆயுதமாக இதைக் கமல்நாத் கையிலெடுத்துள்ளார்.
இன்று ஜோதிராதித்தியாவின் தந்தையும் மத்தியப் பிரதேச காங்கிரசின் முதுபெரும் தலைவரான மாதவராவ் சிந்தியாவின் பிறந்தநாள். இதையடுத்து ஜோதிராதித்ய சிந்தியாவிடமிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை சரிவு: 3 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவிற்கு சேமிப்பு