சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அந்த அமர்வில் நீதிபதிகள் தீர்ப்பில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. ஐந்து நீதிபதிகளில் மூன்று பேர் பெண்களை அனுமதிக்கலாம் என்றும் இரண்டு நீதிபதிகள், பாரம்பரிய நடைமுறை தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில் சபரிமலை மறுஆய்வு மனுக்கள் மீது 2019 நவம்பர் 14ஆம் தேதி தீர்ப்பளித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அந்த வழக்குகளை ஒன்பது பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினார்.
இந்த வழக்கோடு இஸ்லாமிய பெண்களுக்கெதிரான பாலின பாகுபாடு, பார்சி பெண்கள் சந்திக்கும் பாகுபாடு பிரச்னைகள் குறித்து தொடரப்பட்ட வழக்கையும் நீதிமன்றம் விசாரிக்கும் என்றார். இதையடுத்து இந்த வழக்குகள் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த அமர்வு முன்னிலையில் சபரிமலை வழக்கு தொடர்பான 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று (ஜன13) விசாரணைக்கு வந்தது. வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில், நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், சந்தான கவுடர், நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர். காவை, சூர்ய காந்த் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது நீதிபதிகள் மறுசீராய்வு மனுக்களை பரிசீலிக்கப்போவதில்லை எனக் கருத்து தெரிவித்தனர். வழக்கு குறித்து தலைமை நீதிபதி போப்டே, “சபரிமலை வழக்கின் மறுஆய்வு மனுக்களை நாங்கள் கோரவில்லை. கடந்த கால தீர்ப்பின்போது ஐந்து நீதிபதிகள் குறிப்பிட்ட பிரச்னையை பரிசீலிக்க உள்ளோம்” என்றார்.
மேலும் சபரிமலை விவகாரம், இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான மதபாகுபாடு, பார்சி இன பெண்கள் பிரச்னை குறித்து வருகிற 17ஆம் தேதி விசாரிக்கலாம் என்றும் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டே கூறினார்.