கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, கடந்த மூன்று ஆண்டுகளாக வெள்ளம், நிலச்சரிவு கனமழை ஆகியவற்றால் நாடு முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டது என்று சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விவசாய துறை அமைச்சகம் எழுத்து மூலம் பதிலளித்தது. அதில் 2018-19ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 17.097 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் மட்டுமே மழை வெள்ளம், நிலச்சரிவு பேன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-20ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 114 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் 60.47 லட்சம் ஹெக்டேர் நிலமும் ராஜஸ்தானில் 23.92 லட்சம் ஹெக்டேர் நிலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 2020-21இல் தற்போதுவரை பிகாரில் 7.54 லட்சம் ஹெக்டேர் நிலம், கர்நாடகாவில் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலம் என மொத்தம் 20.753 லட்சம் ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2018-19ஆம் ஆண்டில் 1.22 லட்சம் ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 2019-20 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளில் மழைவெள்ளம், நிலச்சரிவு பேன்றவற்றால் தமிழ்நாட்டில் விவசாய நிலம் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'விவசாயிகளிடம் பொய் கூறுவதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்' - ப. சிதம்பரம்