பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்டம் முடிந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு தினங்களில் ஏழு இடங்களில் நிதிஷ்குமார் கூட்டணியை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்யவுள்ளார். பிகார் மக்கள் மனதில் தோற்றுப்போன நிதிஷ்குமாருக்காக பிரதமர் மோடி கடினமாக உழைக்கிறார் என லோக் ஜனசக்தியின் தலைவர் சிராஜ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஏழு இடங்களில் பரப்புரை மேற்கொள்வதற்கு காரணம் பிகாரில் நிதிஷ்குமார் செல்வாக்கு இழந்ததே எனக் கூறிய அவர், ஊழல் செய்த தலைவராக உள்ள நிதிஷ்குமாருக்கு ஏன் பாஜக ஆதரவு கொடுக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதாக நிதிஷ்குமாரை விமர்சித்த அவர், தனது கட்சியினரிடமே அவர் செல்வாக்கை இழந்துள்ளார் என்றும், நிதிஷ்குமாருக்கு பிகாரிகள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், நிதிஷ்குமாருக்கே இந்த முறை தான் வெற்றிபெற போவதில்லை என்பது தெரியும் என்றார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மெகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரை கடுமையாக இன்று விமர்சித்தார்.
50 வயதில் அரசு ஊழியர்கள் ஓய்வு அளிக்ககோரி நிதிஷ்குமார் பிரபித்த ஆணையை சுட்டிக்காட்டி, தற்போது நிதிஷ்குமாருக்கு 70 வயதாகிறது என்றும், இந்தமுறை மக்கள் அவருக்கு ஓய்வளிப்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிகார் தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிவு