இந்தியா முழுவதும் வீதிகளில் விளையாடும் குழந்தைகளின் விளையாட்டு மற்றும் வீதிகளில் குழந்தைகள் கூடி பேசும் நிகழ்வுகளும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. மேலும், ஒரு தெருவிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களும் அருகிலுள்ளவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வழக்கமும் குறைந்துவருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஒரு புதுமையான நிகழ்ச்சிக்கு புதுச்சேரி இன்டாக் பாரம்பரிய கட்டட அமைப்பும் புதுவை சுற்றுலாத்துறையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. அதன்படி, புதுவை காமாட்சி அம்மன் கோயில் தெருவில் சிறுவர்கள் விளையாடி மற்றவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளவும் நமது பாரம்பரிய விளையாட்டான கபடி, சிலம்பம், பம்பரம் விடுதல், கண்ணாமூச்சி, பல்லாங்குழி, திருடன் போலீஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வீதியில் பாரம்பரிய விளையாட்டை விளையாடும் இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு அமைப்புகளின் மூலம் மாணவர்கள், குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு பாரம்பரிய உணவு வகைகளும் பழ வகைகளும் வழங்கப்பட்டன.
இந்த புதிய முயற்சியினை அவ்வழியே சென்ற பொதுமக்களும் பார்த்து ரசித்து சென்றனர்.
இதையும் படிங்க: ‘பாதுகாகப்பட்ட வேளாண் மண்டலம்’ அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?