கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் சானிடைசர், முகக்கவசங்களுடன் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதைக் கருத்தில்கொண்டு வடக்கு ரயில்வே இவற்றை உற்பத்திசெய்ய முடிவுசெய்தது.
வடக்கு ரயில்வேக்குச் சொந்தமான ஜகத்ரி ரயில்வே தொழிற்சாலையில் சோதனை அடிப்படையில் முதலில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றைப் பரிசோதித்த மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஏப்ரல் 5ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இதுவரை ஜகத்ரி ரயில்வே தொழிற்சாலையில் மட்டும் 6,472 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இத்துடன் சேர்த்து வடக்கு ரயில்வே சார்பில் மட்டும் இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்திசெய்யப்பட்டுள்ளன.
மற்ற அனைத்து மண்டலங்களும் சேர்த்து வெறும் 20 ஆயிரம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே உற்பத்திசெய்திருக்கின்றன.
நாள் ஒன்றுக்கு சுமார் 1,500 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்திசெய்வதால் மே மாத இறுதியில் சுமார் 1.30 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்திசெய்ய இந்திய ரயில்வே முடிவுசெய்துள்ளது. இது தவிர இந்திய ரயில்வே சார்பில் 5,917 லிட்டர் சானிடைசர்களும், 46 ஆயிரத்து 373 முகக்கவசங்களும் உற்பத்திசெய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சரக்கு விமானத்தில் கொல்கத்தா பயணமா? - பிரசாந்த் கிஷோர் விளக்கம்