சமீப காலங்களாக, வனவிலங்கு கடத்தல் முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது. பல நாடுகளிலிருந்து விலங்குகள் கைமாற்றப்படுகின்றன. குறிப்பாக, வட வங்காளத்தின் காடுகளில் வனவிலங்கு கடத்தல் அதிகளவில் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. ஜல்தபாரா, கோருமாரா தேசிய பூங்காக்களில் காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டு அவற்றின் கொம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, சிறுத்தையின் தோல், தந்தம், மரச்செக்குகள் ஆகியவை பல நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.
அஸ்ஸாம், பூட்டானில் இருந்து கடத்தல்காரர்கள் பானிகங்கி, சிலிகுரி வழியாக நேபாளத்திற்குள் நுழைகிறார்கள். நேபாளத்திலிருந்து சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விலங்குகள் கடத்தப்படுகின்றன எனக் கூறப்படுகிறது. அதே சமயம், கடத்தல்காரர்கள் பூட்டானில் இருந்து ஃபூன்ட்ஷோலிங் மற்றும் ஜெய்கான் வழியாக இந்தியாவுக்குள் நுழைவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக வனத்துறை பல ஆதாரங்களை திரட்டியுள்ளது. சமீபத்தில், கோபுராவின் விஷம் அடங்கிய பாட்டில், பலுர்காட் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. வனவிலங்கு கடத்தலை தடுக்க புதிதாக ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது. பல வனத்துறை ஊழியர்கள், தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில், டாஸ்க் ஃபோர்ஸ் 100க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது. குறைந்தது 775 கடத்தல்காரர்கள் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, 2 ராயல் பெங்கால் புலிகளின் தோல், 3 காண்டாமிருக கொம்புகள், 4 துப்பாக்கிகள், 15 சிறுத்தை தோல்கள், 362 சிறுத்தை எலும்புகள், கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.